புதுச்சேரி அருகே சாய்பாபா சிலை சேதம்


புதுச்சேரி அருகே சாய்பாபா சிலை சேதம்
x
தினத்தந்தி 22 March 2022 9:29 PM IST (Updated: 22 March 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அருகே கோவிலில் மரப்பெட்டியில் வைத்திருந்த சாய்பாபா சிலையை சேதப்படுத்தியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

புதுச்சேரி அருகே கோவிலில் மரப்பெட்டியில் வைத்திருந்த சாய்பாபா சிலையை சேதப்படுத்தியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சாய்பாபா கோவில்
புதுவையை அடுத்த தமிழக பகுதியான இரும்பை புறவழிச்சாலையில் சிறிய அளவிலான சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த சந்திரசேகர் நிர்வகித்து வருகிறார். 
இந்த கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள்.
சிலை சேதம்
தற்போது அங்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலில் வைப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 2 டன் எடையில் சுமார் 6 அடி உயரம் கொண்ட அமர்ந்த நிலையில் சாய்பாபா சிலை கொண்டு வரப்பட்டு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாய்குமார் என்பவர் கோவிலில் தங்கி இருந்து பூஜை செய்து வருகிறார். இந்தநிலையில் இன்று அதிகாலை அவர் எழுந்து பார்த்தபோது பிரதிஷ்டை செய்வதற்காக வைத்திருந்த புதிய சாய்பாபா சிலை தலை துண்டிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸ் விசாரணை
இதுபற்றி கோவில் நிர்வாகி சந்திரசேகர் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சேதமடைந்த சிலையை பார்வையிட்டனர்.
நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் யாரோ கோவில் அறையில் இருந்த சாய்பாபா சிலையை சேதப்படுத்தி, தீ வைத்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story