புதுச்சேரியில் 29-ந்தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம்


புதுச்சேரியில் 29-ந்தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 March 2022 9:45 PM IST (Updated: 22 March 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 29-ந்தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது.

புதுச்சேரி, மார்ச்.22-
புதுவையில் வருகிற 29-ந்தேதி நடைபெற உள்ள முழுஅடைப்பின்போது 11 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
புதுச்சேரி ஐ.என்.டி.யு.சி. தலைவர் பாலாஜி, ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
விலை உயர்வு
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் பொருளாதார கொள்கைகள் சாமானிய, ஏழை, எளிய உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளது. மத்திய பட்ஜெட் சாமானிய மக்களின் பணத்தை உள்நாட்டு, வெளிநாட்டு பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் வகையில் உள்ளது. 
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையும், வரிதள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அடித்தட்டு மக்கள் பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை 24 முறை உயர்ந்துள்ளது. அரசின் பொருளாதார நடவடிக்கைகள் வரும் காலங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை உருவாக்கும் என்பதை காட்டுகிறது.
முழுஅடைப்பு
இத்தகைய சூழலில்தான் நாட்டின் தொழிற்சங்கங்கள் ஒன்றாக சேர்ந்து 28, 29-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. புதுச்சேரியில் வேலை      நிறுத்தத்தோடு 29-ந்தேதி முழுஅடைப்பு (பந்த்) போராட்டமும் நடத்தப்படுகிறது.
அன்றைய தினம் ராஜா தியேட்டர், அண்ணா சிலை, புதிய பஸ் நிலையம், இந்திராகாந்தி சதுக்கம், மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, வில்லியனூர், பாகூர், தவளக்குப்பம், காரைக்கால் ஆகிய 11 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
அன்றைய தினம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு உள்ளதால் பள்ளிகளை மூட நாங்கள் வலியுறுத்த மாட்டோம். எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று அனைத்து தரப்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்கள்.
பேட்டியின்போது சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சீனுவாசன், தொழிலாளர் முன்னேற்ற சங்க அண்ணா அடைக்கலம், ஏ.ஐ.சி.சி.டி.யு. மோதிலால், ஏ.ஐ.யு.டி.யு.சி. சங்கரன், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story