கிருஷ்ணகிரியில் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரியில் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி:
விழிப்புணர்வு ஊர்வலம்
உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக நீரின் சிக்கனத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் கல்லூரி மாணவிகள் மற்றும் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.
இதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. அதன்படி, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நீர் இன்றியமையாததாக விளங்குகிறது. அதனால் நீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து, மழைநீரை சேகரிப்பதன் மூலம் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கலாம். கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், ஏரிகள் மற்றும் பழமை வாய்ந்த நீராதார கட்டமைப்புகளை ஆழப்படுத்தி மழை நீரினை சேமிக்கலாம். மேலும், வீட்டின் கூரையின் மேல் விழும் மழைநீரை மழைநீர் சேகரிப்பு தொட்டி மூலம் சேமிக்கலாம். திறந்தவெளி கிணறு மூலமும் மழைநீரை சேமிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் சேகர், ஜெய்சங்கர், உதவி நிர்வாக பொறியாளர்கள் பன்னீர்செல்வம், சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஸ்ரீதர், நகராட்சி ஆணையாளர் முருகேசன், இளநிலை பொறியாளர் சாந்தி, நில நீர் வல்லுநர் ராதிகா, தாசில்தார் சரவணன், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நல பணி திட்ட பேராசிரியர் வள்ளிசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story