உலக தண்ணீர் தினத்தையொட்டி நிலத்தடி நீர் தர பரிசோதனை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்


உலக தண்ணீர் தினத்தையொட்டி நிலத்தடி நீர் தர பரிசோதனை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 March 2022 10:32 PM IST (Updated: 22 March 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

உலக தண்ணீர் தினத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் தர பரிசோதனையை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி:
உலக தண்ணீர் தினத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் தர பரிசோதனையை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
நிலத்தடி நீர் தர பரிசோதனை
உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகியவற்றின் சார்பில் நிலத்தடி நீர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் களநீர் தர பரிசோதனை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தடி நீர் தர பரிசோதனை திட்டத்தை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 10 ஒன்றியங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி தர்மபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தரப்பரிசோதனை பெட்டிகள் ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. நிலத்தடி நீரை எவ்வாறு தர பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நேற்று தண்ணீரின் தரத்தை பரிசோதனை செய்யும் நிகழ்ச்சிகள் நடந்தன.
துண்டு பிரசுரங்கள்
இந்த திட்டத்தின் மூலம் 10 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற ஜூன் மாதம் 5- ந்தேதி வரை மொத்தம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் கிராம பகுதிகளில் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சங்கரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், உதவி நிலநீர் வல்லுனர் கல்யாணராமன் மற்றும் உதவி பொறியாளர் ரகோத் சிங் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story