கூட்டுறவு வங்கி முன்பு திரண்ட பயனாளிகள்


கூட்டுறவு வங்கி முன்பு திரண்ட பயனாளிகள்
x
தினத்தந்தி 22 March 2022 11:32 PM IST (Updated: 22 March 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறியதை அடுத்து, ராமநத்தத்தில் கூட்டுறவு வங்கி முன்பு பயனாளிகள் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

ராமநத்தம்,

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரைக்கும் நகை அடகு வைத்து கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ராமநத்தத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே இயங்கி வரும் கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைத்தவர்களில் தள்ளுபடி பெறும் பயனாளிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. 
இதனால், அடகு வைத்தவர்களில் ஏராளமானவர்கள் வங்கியின் முன்பு நேற்று ஒன்று திரண்டனர். பயனாளிகள் பலர் வங்கி முன்பு அமர்ந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. 
தொடர்ந்து, தள்ளுபடி பெறும் பயனாளிகள் விவரங்கள் அடங்கிய பட்டியலை வங்கி ஊழியர்கள் வெளியிட்டனர். அதன்படி உரிய ஆவணங்களுடன் வந்த பயனாளிகளின் விவரங்களை அவர்கள் சரிபார்ப்பு செய்து, அவர்களது நகைகளை திரும்ப வழங்கினர்.

போலீஸ் பாதுகாப்பு

முன்னதாக பயனாளிகள் அதிகளவில் ஒன்று கூடினர். அப்போது சிலர் ஒருவருக்கொருவர் முண்டியடித்து செல்ல முயன்றனர். இதனால் அவர்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் ராமநத்தம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து,  அங்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
5 சவரன் வரைக்கும் நகை கடன் பெற்றவர்களுக்கான நகைகள் திருப்பி வழங்கும் பணி நேற்று முன்தினம் முதல் நடந்து வருவதாக கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story