குடியாத்தம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் அறை, கோ-ஆப்டெக்ஸ்கடைகளுக்கு சீல்


குடியாத்தம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் அறை, கோ-ஆப்டெக்ஸ்கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 22 March 2022 11:35 PM IST (Updated: 22 March 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் அறை, கோ-ஆப்டெக்ஸ்கடைகளுக்கு சீல்

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, வாடகை, தொழில் வரி என ரூ.6 கோடியே 51 லட்சம் நிலுவைத் தொகை உள்ளது. இந்த நிலுவைத் தொகையை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் குபேந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமையில் அலுவலக மேலாளர் சுகந்தி, வருவாய் ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட குழுவினர் கடந்த ஒரு வாரமாக குடியாத்தம் நகராட்சி பகுதியில் தீவிர வரிவசூலில் ஈடுபட்டனர். வரி பாக்கி, வாடகை பாக்கி இருந்த பல கடைகளுக்கு சீல் வைத்தனர். இந்த தீவிர வரிவசூலில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 60 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

போக்குவரத்து பணிமனை மேலாளர் அறைக்கு சீல்
குடியாத்தம் செதுக்கரைப் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றுபவர்களின் தொழில்வரி சுமார் ரூ.70 லட்சம் லட்சத்திற்கும் மேல் நிலுவை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொழில் வரியை வசூலிப்பதற்காக நகராட்சி சார்பில் குடியாத்தம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளுக்கு 54 முறை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளனர். பலமுறை நேரிலும் சென்று தொழில் வரி குறித்து கேட்டுள்ளனர். ஆனாலும் தொழில் வரி கட்டவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனையடுத்து குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, மேலாளர் சுகந்தி, வருவாய் ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் குடியாத்தம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் குமரன் அறையை சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோ-ஆப்டெக்ஸ் கடைகளுக்கும்...

இதேபோல் குடியாத்தம் அரசு மருத்துவமனை அருகில் குடியாத்தம் நகராட்சி வணிக வளாக கடைகளில் கோ-ஆப்டெக்ஸ் கடைகள் உள்ளன .இந்த கடைகளின் சார்பில் 10 லட்சத்து 81 ஆயிரம் வாடகை வரி பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை நிலுவைத் தொகையை செலுத்த நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனாலும் நிலுவைத் தொகை செலுத்தாததால் நேற்று நகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Next Story