ராஜாக்கமங்கலம் அருகே வெடிமருந்து பதுக்கிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது


ராஜாக்கமங்கலம் அருகே வெடிமருந்து பதுக்கிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 March 2022 11:52 PM IST (Updated: 22 March 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே வெடிமருந்து பதுக்கிய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜாக்கமங்கலம், 
ராஜாக்கமங்கலம் அருகே வெடிமருந்து பதுக்கிய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி பலி
ராஜாக்கமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜன் என்ற ராஜன், தொழிலாளி. இவர் அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு பட்டாசு தயாரிப்பதற்காக வீட்டின் முன்பு உள்ள அறையில் வெடிமருந்தை வைத்து இருந்தார். அந்த அறைக்கு ராஜனின் மகள் வர்ஷா (வயது 10) சென்றாள்.
அப்போது வெடிமருந்து வெடித்து சிதறியதில் வர்ஷா உடல் சிதறி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் கடந்த 14-ந்தேதி நடந்தது. இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜனுக்கு வெடிமருந்தை கொடுத்த, அதே பகுதியை சேர்ந்த ராமலட்சமி, அவருடைய தங்கை தங்கம் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் கதிரவன் என்பவர் வெடிமருந்து பொருட்கள் வாங்குவதற்கு லைசென்சு பெற்று, அதை மற்றவர்களுக்கு பட்டாசு தயாரிக்க கொடுப்பதற்கு எந்த விதமான அனுமதியும் பெறாமல் சப்ளை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து கதிரவன், அவருக்கு உதவியதாக அவருடைய தம்பி மணிகண்டன் உள்பட சிலரை போலீசார் தேடி வந்தனர்.
இன்னொரு சம்பவம் 
இந்தநிலையில் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தர்மபுரம் பகுதியை சேர்ந்தவரும், மரப்பட்டறை நடத்தி வருபவருமான ராஜேந்திரன் (42), வீட்டின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் மண்ணை தோண்டி புதைத்து வைத்திருந்த வெடிமருந்து கடந்த 19-ந்தேதி வெடித்து சிதறியது. இதில் சிறுமிகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். 10 வீடுகள் சேதம் அடைந்தன. 
அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அருகில் இருந்த இன்னொரு தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைத்து இருந்த 70 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆறுதெங்கன்விளையில்  கைதான ராமலட்சுமியின் மகளை தான் ராஜேந்திரன் திருமணம் செய்ததும், ஆறுதெங்கன்விளை பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வெடி மருந்து மற்றும் பட்டாசை பறிமுதல் செய்ததை தொடர்ந்து, அங்கிருந்த வெடி மருந்து மற்றும் பட்டாசுகளை தர்மபுரத்துக்கு கொண்டு வந்து புதைத்து வைத்ததும் தெரிய வந்தது.
கைது
அதைத்தொடர்ந்து தலைமறைவான ராஜேந்திரனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வடசேரி பஸ் நிலையத்தில் வெளியூரிலிருந்து பஸ்சில் வந்து இறங்கிய ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
அதே சமயம் மாணவி பலியான வழக்கில் கதிரவனின் தம்பி மணிகண்டனை (39) ஆலங்கோட்டையில் போலீசார் கைது செய்தனர். மணிகண்டன் கட்டிட காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story