அரசு வேலையை மட்டும் எதிர்பார்த்து இருக்க கூடாது: பெண்கள் தொழில்முனைவோராக வேண்டும் கலெக்டர் கவிதாராமு பேச்சு
பெண்கள் தொழில்முனைவோராக வேண்டும் என்று கலெக்டர் கவிதாராமு பேசினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி தொடங்கி வைத்து வேலைவாய்ப்பு தகவல் கையேட்டினை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மாணவிகள் கல்லூரியில் படிக்கும் போதே அடுத்த என்ன ஆக வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்துக்கொள்ள வேண்டும். அரசு துறைகளில் போட்டித்தேர்வுகள் மூலம் பல்வேறு பணியிடங்களை பெறலாம். பெண்கள் பலர் அரசு வேலையை எதிர்பார்த்து உள்ளனர். அதற்கு செய்தித்தாள்கள், புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் ஆகியவற்றை படித்து வெற்றி பெறலாம். அதேநேரத்தில் அரசு வேலையை மட்டும் எதிர்பாராமல் சுய தொழில் தொடங்கவும் பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பெண்கள் தொழில் முனைவோராக வேண்டும். அப்போது மேலும் பலருக்கு வேலைவாய்ப்பை கொடுக்க முடியும். அதற்கு உங்களிடம் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். உங்களை பார்த்து பெற்றோருக்கும் தன்னம்பிக்கை வர வேண்டும். சுய தொழில் தொடங்குவதற்கு அரசின் பல்வேறு திட்டங்கள், உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் உள்ளன. இதனை அறிந்து பயன்பெறலாம்’’ என்றார். போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி, சுய தொழில்களுக்கான வாய்ப்புகள், அரசு கல்வி கடன் உதவி உள்ளிட்ட தலைப்புகளில் அதிகாரிகள் பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகண்டன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரிபுரசுந்தரி, முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ், அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story