நாகர்கோவிலில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நாளை தொடங்குகிறது
நாகர்கோவிலில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நாளை (வியாழக்கிழமை) முதல் 7 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி மாரத்தான் போட்டி, மணல் சிற்பம் உருவாக்குதல், படகு போட்டி நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நாளை (வியாழக்கிழமை) முதல் 7 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி மாரத்தான் போட்டி, மணல் சிற்பம் உருவாக்குதல், படகு போட்டி நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
கலந்தாய்வு கூட்டம்
குமரி மாவட்டத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நடத்துவது குறித்து துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் வகையில் 75 -வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சி குமரி மாவட்டம், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
மணல் சிற்ப போட்டி
25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விளையாட்டுத்துறை, பள்ளி மற்றும் உயர்கல்வித்துறையின் சார்பில் 5 கி.மீ. மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெறும். போட்டியானது காலை 6.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாக முகப்பில் இருந்து தொடங்கி வைக்கப்படும். 26-ந் தேதி (சனிக்கிழமை) விளையாட்டுத்துறை, பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை சார்பில் காலை 6.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகம் முன்பில் இருந்து மாபெரும் சைக்கிள் பேரணியும், காலை 8 மணிக்கு சுற்றுலாத்துறை சார்பில் குளச்சல் கடற்கரையில் சுதந்திர போராட்ட தியாகிகளின் மணல் சிற்பம் உருவாக்கும் போட்டியும் நடைபெறும்.
கலைப்போட்டி
27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கடற்கரையில் மீன்வளத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் மாபெரும் படகுப்போட்டி நடக்கிறது. 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் கோலப்போட்டியானது நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. 30-ந் தேதி (புதன் கிழமை) காலை 9 மணிக்கு எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை போட்டி நடைபெறும்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட், இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) சத்தியஜோஸ். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண், கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் அமுதன், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார், மாநகர நல அதிகாரி விஜய சந்திரன் உள்பட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story