போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல்


போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல்
x

கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தில் போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல் நடந்தது.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேன் (வயது 23). இவர் இதே கிராமத்தைச் சேர்ந்த இருவருடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவர்களை சந்தேகத்தின்பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

3 நபர்கள் மீதும் திருட்டு வழக்கு பதியப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்களது உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாரை கண்டித்து கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

3 பேரையும் போலீசார் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். தகவலறிந்த வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடதத அழைப்பு விடுத்தார். 

அதன்பின் மறியல் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகானந்தம் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது.

மறியலால் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story