மாவட்ட தனித்திறன் போட்டிகளில் மோகனூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
நாமக்கல் மாவட்ட தனித்திறன் போட்டிகளில் மோகனூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
மோகனூர்:-
தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி மாவட்ட அளவிலான பல்வேறு தனித்திறன் போட்டிகள் நாமக்கல்லில் நடந்தது. இந்த போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு வெற்றிகளை பெற்று சாதனை படைத்தனர். மோகனூர் அரசு பள்ளி 11-ம் வகுப்பு மாணவி சந்தியா கட்டுரை போட்டியில் முதலிடமும், ஸ்ரீகவி பேச்சுப்போட்டியில் 2-வது இடமும், கவிதை போட்டியில் அருள்மொழி 3-வது இடமும் பெற்றனர்.
கதாபாத்திரம் ஏற்று நடித்தல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவிகள் பியூலா, வித்யா, அனிதா, விஜிதா, சிவரஞ்சனி ஆகியோர் அடங்கிய குழு 2-ம் இடமும் பெற்றனர். முழக்கம் எழுதுதல் போட்டியில் 10-ம் வகுப்பு மாணவி சுபிட்சா முதலிடம் பெற்றார்.
அதேபோல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த பேச்சுப்போட்டியில் 10-ம் வகுப்பு, மாணவி ஸ்ரீசிவநிதி 3-ம் இடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். தனித்திறன் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளை, பள்ளி தலைமை ஆசிரியர் சுடர்ரொளி, உதவி தலைமை ஆசிரியை கோபாலகிருஷ்ணன், செங்காந்தள் தமிழாய்வு மன்ற பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பாராட்டினர்.
Related Tags :
Next Story