புதுக்கோட்டை அருகே 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை


புதுக்கோட்டை அருகே 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 23 March 2022 12:32 AM IST (Updated: 23 March 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை:
சாராய ஊறல்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குடுமியான்மலை வண்ணாரப்பட்டி, சீவகம்பட்டி, கவிநாரிப்பட்டி பகுதியில் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வண்ணாரப்பட்டி அர்ச்சுனன்குளம் அருகில் முற்புதர்களில் சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்கள் கொண்ட வெல்லம், பேரீச்சம் பழம், கடுக்காய் வசம்பு, அழுகிய பழங்கள் போடப்பட்ட சாராய ஊறல்கள் 7 பேரல்களில் இருந்ததை கண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செரீனா பேகம் மற்றும் மதுவிலக்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
2,300 லிட்டர் பறிமுதல்
ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்த இடத்தில் சாராய ஊறல்கள் மொத்தம் 2 ஆயிரத்து 300 லிட்டர் அளவில் இருந்தது. மேலும் 10 லிட்டர் சாராயம் காய்ச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மதுவிலக்குபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது பழக்கம் குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது. மதுபானங்களின் விலை உயர்வால் சாராயம் காய்ச்சும் நபர்கள் மீண்டும் காய்ச்ச தொடங்கி விட்டனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1,800 லிட்டர் சாராயம்
 இதேபோல் அன்னவாசல் அருகே உள்ள விருமாங்குளம் பகுதியில் அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விருமாங்குளம் பகுதியில் போடப்பட்டிருந்த 1,800 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து தரையில் ஊற்றி அழித்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story