சமையல் கியாஸ் விலை உயர்வு: இல்லத்தரசிகள் வேதனை
சமையல் கியாஸ் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளதால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சமையல் கியாஸ் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளதால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மானியம் குறைவு
இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:-
சுந்தரி (ஸ்ரீவில்லிபுத்தூர்):- மத்திய அரசு கியாஸ் விலையை உயர்த்தியுள்ளது மிகவும் வருந்தத்தக்கது. தொடர்ந்து மானியம் குறைந்து வருகிறது. ஆனால் கியாஸ் விலை மட்டும் உயர்ந்து கொண்டு வருகிறது. எனவே இல்லத்தரசிகள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையை சந்தித்துள்ளனர். மத்திய அரசு உடனடியாக கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மானியத்தின் அளவையும் அதிகரிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
கடுமையான பாதிப்பு
ரோகிணி (விருதுநகர்):- மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மேலும் ரூ. 50 அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 மாதங்களில் சமையல் கியாஸ் விலை ரூ.257 அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வு ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரை கடுமையாக பாதிக்கும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.710 ஆக இருந்த சிலிண்டர் விலை கடந்த அக்டோபர் மாதம் ரூ. 917 ஆக உயர்ந்தது. தற்போது மேலும் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே நிலையில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டால் அடுத்த மாதம் சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்தை எட்டும் என்று அஞ்ச வேண்டியுள்ளது. எனவே மத்திய அரசு ஏழை, எளிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சிலிண்டர் விலை உயர்வை தவிர்க்க வேண்டும். சிலிண்டருக்கான மானியத்தை உயர்த்த வேண்டும்.
விறகு அடுப்பு
ஸ்ரீபிரியா (கொங்கன்குளம்):- பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இந்த விலை ஏற்றத்தின் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயரும் என எதிர்பார்த்தோம். அதேபோல் நடந்துவிட்டது. நடுத்தர வர்க்கத்தினரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலிண்டர் விலை அடிக்கடி உயர்வதால் நடுத்தர ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படகூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. மீண்டும் விறகு அடுப்பு வைத்து எரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பெரும் சுமை
தேவகி (ராஜபாளையம்):- கடந்த சில மாதங்களாக சமையல் கியாஸ் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் நடுத்தர மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறோம். கொரோனா காலம் முடிந்து தற்போது தான் வாழ்வாதாரம் சற்று உயர்ந்து வரும் நிலையில் இந்த விலை உயர்வு எங்களுக்கு பெரும் சுமையாகி விட்டது. 2 நேரம் சமைக்கும் பழக்கம் கொண்ட குடும்பத்தினர் தற்போது ஒரு நேரம் மட்டுமே சமைத்து 3 நேரம் சாப்பிட கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதல் வசூல்
லட்சுமி (பள்ளப்பட்டி):- பட்டாசு தொழிலாளியான எனக்கு தற்போது போதிய வேலை இல்லாமலும், வருமானம் இல்லாமலும் கஷ்டப்பட்டு வருகிறேன். இந்த நிலையில் தினமும் ஒரு பொருளின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வழக்கத்தை விட கூடுதல் செலவு ஆகிறது. ஏற்கனவே கியாஸ் சிலிண்டருக்கு எங்கள் பகுதியில் கூடுதலாக ரூ.40 வசூல் செய்கிறார்கள். இந்தநிலையில் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இனி கியாஸ் சிலிண்டர் வாங்க வேண்டும் என்றால் மாதம் ரூ.1040 ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியே விலை உயர்ந்து கொண்டே போனால் வரும் காலங்களில் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தாமல் மாட்டு சாணத்தால் தயாரிக்கப்பட்ட வரட்டியை தான் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story