மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்
கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை மாவட்ட வருவாய் அதிகாரி லியாகத் பார்வையிட்டார்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கட்டளை, ரெங்கநாதபுரம், மாயனூர், மேல மாயனூர், நத்தமேடு, ஆர்.புதுக்கோட்டை, மணவாசி, சித்தலவாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணி நடைபெற்று வருவதால் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை அளந்து மூட்டையாக கட்டி கட்டளை கிராமத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்திருந்தனர். மேலும், நெல்மணிகளை திறந்த வெளியில் குவித்து வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த பகுதியில் திடீரென பெய்த மழையினால் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து சேதமடைந்து வருகிறது. இதனால், கவலை அடைந்த விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட அதிகாரி பார்வையிட்டார்
விவசாயிகளின் கோரிக்கையின்பேரில், கொள்முதல் நிலையத்தில் மழையால் நனைந்த நெல் மூட்டைகளை மாவட்ட வருவாய் அதிகாரி லியாகத் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக கொள்முதல் செய்து லாரிகள் மூலம் எடுத்துச் செல்லவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்பேரில், லாரிகள் மூலம் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அப்போது குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, நுகர்வோர் வாணிப கழக மண்டல மேலாளர் யசோதா, மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் யசோதா, கட்டளை வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story