போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியது
கரூர்
அரசின் பல்வேறு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு கலங்கரை விளக்கம் என்ற திட்டத்தின் மூலம் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்ட மைய நூலகம், மாயனூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அய்யர்மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட அனைத்து பயிற்சி மையங்களிலும் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
கரூர் மாவட்டத்தில், முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று(நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. கரூர் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட மைய நூலகத்திலும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டிடம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு அய்யர்மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு மாயனூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு காணியாளம்பட்டி அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த 7 பயிற்சி மையங்களிலும் வாரந்தோறும் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் எவ்வாறு தேர்வுகள் நடத்தப்படுகிறதோ அதேபோல ஓ.எம்.ஆர்.தாளில் விடையளிக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும்.
மேலும், மாவட்ட மைய நூலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 34 கிளை நூலகங்கள், 57 ஊர்ப்புற நூலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள 157 அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்ட நூலகங்கள் என மொத்தம் 249 நூலகங்களில் போட்டித் தேர்வுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பயிற்சி கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள், தேர்வு எழுதுவதற்கான ஓ.எம்.ஆர். தாள்கள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story