தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. அதன்படி பெரம்பலூரில் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலை முதல் மாலை வரை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த பலமணி நேர தொடர் தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கவுதமன் வரவேற்றார். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரிஅனந்தன் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநில துணைத்தலைவர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் இளங்கோவன், அரியலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் பஞ்சாபிகேசன், கூட்டுறவுத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சிவகுமார் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கைளை வலியுறுத்தி பேசினர். சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து, அவரை பணி ஓய்வில் செல்ல உடனடியாக உரிய ஆணை வழங்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் இருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வு ஆணைகளை மேலும் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கணினி இயக்குபவர்களின் பணிவரன்முறை குறித்து அரசு ஆணை பிறப்பித்து பல ஆண்டுகள் கடந்த நிலையில், அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்றுவரும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட பொருளாளர் அறிவழகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story