மேகதாது திட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம் சட்டவிரோதமானது-சித்தராமையா ஆவேசம்
மேகதாது திட்டத்திற்கு நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் தீர்மானம் சட்டவிரோதமானது என்று சட்டசபையில் சித்தராமையா ஆவேசமாக கூறினார்
பெங்களூரு: மேகதாது திட்டத்திற்கு நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் தீர்மானம் சட்டவிரோதமானது என்று சட்டசபையில் சித்தராமையா ஆவேசமாக கூறினார். கர்நாடக சட்டசபையில் நேற்று தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-
காவிரி உபரி நீர்
தமிழக அரசு சட்டசபையில் மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது 100-க்கு 100 சதவீதம் சட்டவிரோதமானது. இதை நான் மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் கண்டித்து கருத்து வெளியிட்டு இருந்தோம். இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு எந்த சட்ட உரிமையும் இல்லை. அனைத்துக்கட்சிகளும் சேர்ந்து அரசியல் நோக்கத்துடன் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.
இந்த தீர்மானத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். காவிரி உபரி நீரை பயன்படுத்தவே மேகதாது திட்டத்தை செயல்படுத்துகிறோம். இதை தடுக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை.
நமது நிலத்தில் அணை கட்டுகிறோம். சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதை உறுதி செய்ய காவிரி நிர்வாக ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பது சரியல்ல
இந்த நீரை மட்டுமே பெற தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 582 டி.எம்.சி. நீர் சென்றுள்ளது. இது நமது நீர். இந்த நீருக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு கிடையாது. நமது நீரை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மேகதாது திட்டத்தை அமல்படுத்துகிறோம்.
பெங்களூருவில் இன்னும் 30 சதவீதம் பேருக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை. நகரின் மக்கள்தொகை 1½ கோடியாக அதிகரித்துவிட்டது. நமது உரிமையை பயன்படுத்த தமிழகம் எதிர்ப்பது சரியல்ல. தமிழக அரசின் இந்த செயலை கர்நாடகம் சகித்துக்கொள்ள வேண்டுமா?.
ஒருமித்த தீர்மானம்
காவிரி நீர் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்களால் கர்நாடகத்திற்கு தொடர்ந்து அநியாயம் ஏற்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் நீர், மொழி, நிலம் பிரச்சினையில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். இந்த விவகாரங்களில் அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படுகின்றன.
அதனால் தமிழக அரசுக்கு எதிராக ஒருமித்த தீர்மானத்தை கொண்டு வந்த நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு நியாயமாக நடந்து கொண்டு இந்த திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story