செஷல்ஸ் தீவில் சிறை பிடிக்கப்பட்ட 48 குமரி மீனவர்கள் உள்பட 53 பேர் விடுவிப்பு
ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற போது செஷல்ஸ் தீவில் சிறை பிடிக்கப்பட்ட 48 குமரி மீனவர்கள் உள்பட 53 பேர் விடுவிக்கப்பட்டனர்.
கொல்லங்கோடு,
ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற போது செஷல்ஸ் தீவில் சிறை பிடிக்கப்பட்ட 48 குமரி மீனவர்கள் உள்பட 53 பேர் விடுவிக்கப்பட்டனர்.
ஆழ்கடல் மீன்பிடிப்பு
குமரி மாவட்டம் சின்னத்துறை, பூத்துறை, தூத்தூர் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5 விசைப்படகுகளில் குமரி மாவட்டம் மற்றும் கேரள, வடமாநிலங்களை சேர்ந்த 58 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த மாதம் 22-ந் தேதி கொச்சியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடித்து கொண்டிருந்த போது பலத்த காற்று காரணமாக படகுகள் திசைமாறி செஷல்ஸ் தீவு எல்லைக்குள் சென்றதாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் செஷல்ஸ் நாட்டு கடற்படையினர் 5 படகுகளையும் அதில் இருந்த 58 மீனவர்களையும் சிறைப்பிடித்து சென்றனர். படகில் இருந்த கேப்டன்களை மட்டும் சிறையில் அடைத்து விட்டு மீனவர்களை அவர்களது படகுகளிலேயே தங்க வைத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் கோரிக்கை விடுத்து வந்தார்.
விடுவிப்பு
இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்டு 15 நாட்கள் கடந்த நிலையில் அந்த நாட்டு ேகார்ட்டில் மீனவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது விசாரணை நடத்திய நீதிபதிகள் விசைப்படகின் 5 கேப்டன்களை மட்டும் 14 நாட்கள் சிறைகாவலில் வைத்து விட்டு, மீதமுள்ள 53 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். இவர்களில் 48 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
விடுவிக்கப்பட்ட மீனவர்களை அழைத்து வர இந்திய ராணுவ விமானம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் சென்னைக்கு வந்து விரைவில் குமரிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோரிக்கை
இதற்கிடைேய சிறையில் வைக்கப்பட்டுள்ள 5 கேப்டன்களையும், விசைப்படகுகளையும் எவ்வித அபராதம் இன்றி விடுவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கும், செஷல்ஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story