சிவமொக்கா கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது


சிவமொக்கா கோட்டை மாரியம்மன் கோவில்  திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 23 March 2022 2:51 AM IST (Updated: 23 March 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த திருவிழா 5 நாட்கள் வரை நடக்கிறது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

சிவமொக்கா: சிவமொக்கா கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த திருவிழா 5 நாட்கள் வரை நடக்கிறது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா

சிவமொக்கா நகரில் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடப்பது வழக்கம்.கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் திருவிழா நடந்தது. அதன்பிறகு தற்போது நடக்க உள்ளது. 

அதன்படி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த திருவிழா வருகிற 26-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி சிவமொக்கா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

சிறப்பு பூஜை

திருவிழாவின் முதல்நாள் மாரியம்மனை கோட்டை பகுதியில் இருந்து தாய்வீடு என்று அழைக்கப்படும் காந்தி பஜாருக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். அன்றைய தினம் முழுவதும் அங்கு வைத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். 

அதன்பிறகு இரவில் கோட்டை பகுதிக்கு மாரியம்மன் சிலை கொண்டு வரப்படும். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதியினர் திருவிழா நடத்துவார்கள்.
கோவில் திருவிழா தொடங்கியதையொட்டி கோட்டை மாரியம்மனுக்கு நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் மாரியம்மன் சிலை, தாய்வீடான காந்தி பஜார் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

காந்தி பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாரியம்மன் சிலையை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் தங்களின் நேர்த்தி கடனையும் பக்தர்கள் செலுத்தினார்கள். 

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கி உள்ளதால், சிவமொக்கா நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

போக்குவரத்து மாற்றம்

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கி உள்ளதால், சிவமொக்கா நகரில் 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காந்தி பஜாரில் இருந்து எஸ்.பி.எம். சாலைக்கு செல்ல போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. 

முக்கிய பிரமுகர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதிக்கப்படுகிறது. 
பத்ராவதி, என்.ஆர்.புராவில் இருந்து சிவமொக்கா நகருக்குள் வரும் வாகனங்கள் எம்.ஆர்.எஸ். சர்க்கிள், பைபாஸ் வழியாக நகருக்குள் வர வேண்டும். ஒலேஒன்னூரில் இருந்து வரும் பஸ், லாரிகள் வித்யாநகர், எம்.ஆர்.எஸ். சதுக்கம் வழியாகவும், ஒன்னாளியில் இருந்து வரும் வாகனங்கள் சங்கொள்ளி ராயண்ணா சர்க்கிள், கே.இ.பி. சர்க்கிள், ரெயில் நிலையம் வழியாகவும் நகருக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவிழா நடக்கும் 5 நாட்களும் இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று கலெக்டர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

Next Story