குடகில் மேலும் ஒரு யானைகள் பயிற்சி முகாம்


குடகில் மேலும் ஒரு யானைகள் பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 23 March 2022 2:56 AM IST (Updated: 23 March 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

மத்திகோடு, துபாரேவை தொடர்ந்து குடகில் மேலும் ஒரு யானைகள் பயிற்சி முகாம் அமைய உள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த யானை முகாம் அமைய உள்ளது

குடகு: மத்திகோடு, துபாரேவை தொடர்ந்து குடகில் மேலும் ஒரு யானைகள் பயிற்சி முகாம் அமைய உள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த யானை முகாம் அமைய உள்ளது.

யானைகள் பயிற்சி முகாம்

குடகு மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. குடகு மாவட்டத்தில் அதிகமாக வனப்பகுதிகள் உள்ளன. இதனால் அங்கு காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகமாக வசித்து வருகின்றன. குடகில் துபாரே, மத்திகோடு என 2 இடங்களில் யானைகள் பயிற்சி முகாம்கள் உள்ளன. 

அதாவது, வனப்பகுதிகளில் அட்டகாசம் செய்யும் யானைகளை பிடித்து முகாம்களில் கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 2 முகாம்களிலும் தலா 30 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் இருந்து தான் உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவுக்கு யானைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் ஒரு முகாம்

இந்த நிலையில் ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் 15 யானைகள் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால், துபாரே, மத்திகோடு முகாமில் அதிக யானை இருப்பதால், அங்கு யானைகளின் எண்ணிக்கையை குறைக்க வனத்துறை முடிவு செய்தது. அந்த வகையில், குடகில் மேலும் ஒரு யானை முகாம் அமைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். 

அதன்படி, ஹாரங்கி அணையையொட்டி 10 ஏக்கர் பரப்பளவில் புதிய யானைகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ,50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திகோடு, துபாரேவை தொடர்ந்து குடகில் 3-வது யானைகள் பயிற்சி முகாம் அமைய உள்ளது. 
இங்கு 15 யானைகளை பராமரிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Next Story