தஞ்சையில் ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் மீட்பு


தஞ்சையில் ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் மீட்பு
x
தினத்தந்தி 23 March 2022 3:10 AM IST (Updated: 23 March 2022 3:10 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ரூ.5 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டதையடுத்து அதில் இருந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

தஞ்சாவூர்;
தஞ்சையில் ரூ.5 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டதையடுத்து அதில் இருந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
சாலை விரிவாக்க பணி
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து தென்கீழ் அலங்கம் வழியாக செல்லும் சாலை குறுகலாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்தும் நிகழ்ந்து வந்தது. இதையடுத்து இந்த பகுதியில் அகழி கரையில் குடியிருந்தவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அகலப்படுத்தப்பட்டு பக்கவாட்டில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை தென்கீழ் அலங்கம் பகுதியில் அகழிகரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு முத்து வைத்தியசாலை என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பின்னர் மருத்துவமனை இருந்த இடத்தை பாலகிருஷ்ணன் என்பவர் தனது மளிகை கடைக்கான பொருட்களை வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார்.
கோர்ட்டில் வழக்கு
இதற்கிடையில் தஞ்சை மாநகராட்சி, தென்கீழ் அலங்கம் சாலையை அகலப்படுத்தும் விதமாக இடையூறாக இருந்த கட்டிடத்தை இடிக்க முடிவு செய்தது. இதை எதிர்த்து பாலகிருஷ்ணனின் மகன்கள் தஞ்சை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மாநகராட்சிக்கு சாதமாக தீர்ப்பு கூறப்பட்டது.
இதையடுத்து பாலகிருஷ்ணனின் மகன்கள் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள்  சாலை விரிவாக்க பணி மேற்கொள்வதற்காக, இடத்தை ஒப்படைக்குமாறு கேட்டனர். அதற்கு அவர்களும் தருவதாக ஒப்புக்கொண்டனர்.
கட்டிடம் இடிப்பு
இதையடுத்து 2,400 சதுரஅடி பரப்பளவில் இருந்த கட்டிடம் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மேற்பார்வையில் உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், மேலாளர் கிளமெண்ட், உதவி பொறியாளர் கார்த்திகேயன், இளநிலை பொறியாளர் கண்ணதாசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.
முன்னதாக அந்த வீட்டிற்கு சென்ற மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து 2 பொக்லின் எந்திரங்கள் உதவியுடன் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதே போல் தென்கீழ் அலங்கம் பகுதியில் மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அகற்றுமாறும், கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறுகையில்அகழியின் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம் சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்தது. இதையடுத்து கட்டிடத்தை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டதும், தற்போது கட்டிடத்தை பயன்படுத்துபவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் மாநகராட்சிக்கு சாதமாக தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கட்டிடத்தை வைத்திருந்தவர்கள் தாங்களாகவே நேற்று இடத்தை இடித்து தருவதாக கூறினர்.
தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் முன்னிலையில் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது” என்றார்.
ரூ.5 கோடி மதிப்பு
இந்த இடம் குறித்து வழக்கு தொடர்ந்த வெங்கடேசன் கூறுகையில், 2,400 சதுர அடி பரப்புள்ள இந்த இடத்தை நாங்கள் 24 ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கினோம். இந்த இடம் தொடர்பான வழக்கில் கீழ் கோர்ட்டில் மாநகராட்சிக்கு சாதமாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து நாங்கள் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இடத்தை ஒப்படைக்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் நாங்கள் வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு இடத்தை ஒப்படைக்க முடிவு செய்தோம்.
தற்போது ரூ.5 கோடி மதிப்புள்ள அந்த இடத்தில் இருந்த கட்டிடத்தை நாங்களே இடித்து தருவதாகவும் கூறினோம். அதன்படி கட்டிடத்தை இடித்து மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளோம். மேலும் இது தொடர்பான வழக்கையும் வாபஸ் பெறுகிறோம்.என்றார்.

Next Story