சத்தியமங்கலம் அருகே பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா- லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
சத்தியமங்கலம் அருகே பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பண்ணாரி குண்டம் விழா
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா மிகவும் புகழ் பெற்றதாகும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு செய்வது வழக்கம். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு குண்டம் இறங்குவார்கள்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஆன்மிக விழாக்கள், கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 2 ஆண்டுகள் பண்ணாரி அம்மன் கோவில் விழா எளிமையான முறையில் நடந்தது. கடந்த ஆண்டு குண்டம் விழாவில் கோவில் பூசாரி மட்டும் குண்டம் இறங்கினார்.
பூச்சாட்டு
இந்தநிலையில் கொரோனா பரவல் குறைவு காரணமாக இந்த ஆண்டு குண்டம் விழா வழக்கம்போல கொண்டாடப்படும் என்று அறி விக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 7-ந்தேதி பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது. 15-ந் தேதி கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து வழக்கம்போல தினமும் இரவு கம்பம் நடனம், பீனாட்சி இசை, தப்பட்டை இசையுடன் நிகழ்ச்சிகள் நடந்தன. இதுபோல் பண்ணாரி அம்மன் திருவீதி உலா பண்ணாரியை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று அதிகாலை நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு குண்டம் அமைக்கும் பணிகள் தொடங்கின. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய எரிகரும்புகள் (ஊஞ்ச மர விறகுகள்) கோவிலின் முன்பு குண்டம் பற்ற வைக்கும் இடத்தில் குவிக்கப்பட்டன.
குண்டம் அமைப்பு
மலைபோல் குவிக்கப்பட்ட பல ஆயிரம் கிலோ எரி கரும்புகள் எரிப்பதற்கு தயார் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு எரிகரும்பு எரியூட்டப்பட்டது. குண்டம் கொழுந்து விட்டு எரிந்தது. நள்ளிரவு முழுவதும் எரிகரும்புகள் எரிந்து அக்னி கனல்களாக மாறின. நேற்று அதிகாலை 2 மணி அளவில் அக்னி கனல்கள் செந்நிறத்தில் தீப்பிளம்புகளாக கொதித்தன.
பின்னர் குண்டம் அமைக்கும் பணி நடந்தது. அதற்கான பணியாளர்கள் தீ கனல்களை உடைத்து 15 அடி நீளம், 4 அடி அகலம் 2 அடி உயரத்தில் குண்டம் அமைத்தனர். அதிகாலை 3.45 மணி அளவில் குண்டம் தயார் ஆனது. இதற்கிடையே அதிகாலை 2.30 மணிக்கு அம்மை அழைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை தோளில் சுமந்துகொண்டு பூசாரிகள், முக்கியஸ்தர்கள் தெப்ப குளம் சென்றனர். அங்கு காவல் தெய்வம் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 3.35 மணி அளவில் குண்டம் இறங்க அம்மன் அனுமதி கிடைத்தது.
பக்தி கோஷம்
அதைத்தொடர்ந்து தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலம் தொடங்கியது. தீப்பந்தங்கள் பிடித்தபடி சிலர் முன் செல்ல சப்பரத்தில் அம்மன் உற்சவம் கொண்டுவரப்பட்டது. அதிகாலை 3.45 மணிக்கு சப்பரம் கோவில் வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து கும்பம் மற்றும் படைக்கலம் எடுத்து வரப்பட்டது. படைக்கலத்தை பூசாரி செந்தில், கும்பத்தை பூசாரி ராஜேந்திரனும் தலையில் சுமந்து வந்தனர். முத்துக்குடைகள் பிடித்தபடி பக்தர்கள் வந்தனர்.
படைக்கலம், கும்பம், அம்மன் சப்பரம் குண்டம் வளாகத்தை வந்து சேர்ந்ததும் பூசாரி செந்தில் படைக்கலங்களை குண்டத்தின் முன்பு வைத்தார். கும்பமும் வைக்கப்பட்டது. தொடர்ந்து குண்டத்துக்கு பூஜை செய்யப்பட்டது. பெரிய கற்பூர கட்டிகள் குண்டத்தை சுற்றி பற்றவைத்து தீப ஆராதனை செய்யப்பட்டது. பூவினால் ஆன பந்து ஒன்றை குண்டத்தின் மீது வீசிய பூசாரி படைக்கலத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நடந்து சென்றார். அப்போது கூடி இருந்த பக்தர்களின் பக்தி கோஷம் அனைத்து இடங்களிலும் எதிரொலித்தது. அதுபோல் பெண்பக்தர்கள் சிலருக்கும் அம்மன் அருள் வந்தது.
தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். சப்பரத்துடன் வந்தவர்கள் குண்டம் இறங்கவில்லை.
லட்சக்கணக்கானவர்கள்...
அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்கும் வழிபாடு பகலிலும் தொடர்ந்தது. 10 நாட்களுக்கும் மேல் குண்டம் இறங்க காத்திருந்த பக்தர்கள் உள்பட லட்சக்கணக்கானவர்கள் குண்டம் இறங்கினார்கள்.
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா, ஈரோடு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி, முன்னாள் எம்.பி. கே.கே.காளியப்பன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி, என்.பி.டி.எம். கோபு உள்பட பண்ணாரி மாரியம்மனின் பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். காவல்துறையினர், திருநங்கைகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறை வேற்றினார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை சுமந்து கொண்டு வந்து குண்டத்தில் இறங்கினார்கள். பக்தர்கள் ஒவ்வொருவரும் பக்தி பரவசத்துடன் குண்டத்தில் இறங்கினார்கள்.
கால்நடைகள் இறங்கின
விழாவையொட்டி பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் குண்டம் இறங்கிய பின்னர் வழக்கம்போல பக்தர்கள் அழைத்து வந்த கால்நடைகளும் குண்டம் இறங்கின.
விழாவையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆ.கனகேஸ்வரி, ஜானகிராமன், பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குண்டத்தின் அருகே தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஊர்க்காவல் படையினர், சாலை பாதுகாப்பு படையினர் பணியில் இருந்தனர்.
விழாவை தொடர்ந்து நேற்று மாலை புஷ்பரதம் உலா நடந்தது. 24-ந் தேதி மஞ்சள் நீராட்டுவிழா, 25-ந் தேதி திருவிளக்கு பூஜை, 28-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story