மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்படும
மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்படும
திருப்பூரில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று மாணவர்கள்-ஆசிரியர்களுக்கான கைப்பேசி செயலி அறிமுக விழாவில் மேயர் தினேஷ்குமார் பேசினார்.
கைப்பேசி செயலி அறிமுகவிழா
திருப்பூர் மாநகராட்சி 4 வது வார்டுக்குட்பட்ட பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 423 மாணவர்கள், 444 மாணவிகள் என மொத்தம் 865 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கைப்பேசி செயலி உருவாகக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுகவிழா பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தலைமை தாங்கினார். துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் வரவேற்றார். 4 வது வார்டு கவுன்சிலர் முத்துசாமி, 2 வது மண்டல உதவி கமிஷனர் கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன், வட்டார கல்வி அலுவலர் முஸ்ரத் பேகம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பட்டுலிங்கம், எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் திருக்குமரன், செயலி தயாரிப்பு நிறுவன முதன்மை செயல் அலுவலர் ராஜ்மோகன் கோவிந்தசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார் செயலியை அறிமுகப்படுத்தி பேசியதாவது
தரம் உயர்த்தப்படும்
கல்வி கற்பிப்பதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த பள்ளி சார்பில் பிரத்யேக கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கான வீட்டுப் பாடங்கள், பள்ளியின் செயல்பாடுகள், சுற்றறிக்கைகள், விளக்கப்படங்கள் உள்ளிட்டவற்றை மாணவர்களும், ஆசிரியர்களும் வீட்டில் இருந்தபடியே பதிவேற்றம் செய்யலாம். இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
திருப்பூரை முதன்மை மாநகராட்சியாக மாற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். மேலும் திருப்பூரில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். முடிவில் பள்ளி தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலா நன்றி கூறினார். இதில் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story