9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் மெல்கி ராஜாசிங், மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், மாவட்ட துணைத்தலைவர்கள் வீரமணி, மீராகண்ணன், கோதை முருகன், ஜார்ஜ், ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் காந்திமதிநாதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் திரளான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலர்களுக்கும் வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்து பணி வரன்முறை செய்ய வேண்டும், முழு சுகாதார திட்ட வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையிலிருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வு ஆணைகளை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும், வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர் பணியிடங்கள் அனைத்தையும் தேர்வாணையம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிர்வாகி நிதியை காலதாமதமின்றி அனைத்து வட்டாரங்களுக்கும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மகேந்திரன் நன்றி கூறினார். இவர்கள் காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story