பக்தர்கள் உடல் முழுவதும் சேறுபூசி நேர்த்திக்கடன்


பக்தர்கள் உடல் முழுவதும் சேறுபூசி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 23 March 2022 6:42 PM IST (Updated: 23 March 2022 6:42 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில், பக்தர்கள் உடல் முழுவதும் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கமுதி, 
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில், பக்தர்கள் உடல் முழுவதும் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கொடியேற்றம்
கமுதி முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குதிரை, யானை, காமதேனு, ரிஷபம் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. 
தினமும் பொதுமக்களுக்கு சுண்டல் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். திருவிழாவின் முக்கிய நாளான நேற்று கோவிலின் முன்பு ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 
நேர்த்திக்கடன்
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலில் உருண்டு கொடுக்கும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அக்கினிச்சட்டி திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டி விரதம் இருந்து வந்தவர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
இதில் அதிகாலையில் இருந்து பக்தர்கள் பலர் தங்களது உடல் முழுவதும் களிமண் சேறு பூசிக் கொண்டு, கையில் வேப்பிலையுடன் கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழகத்தில் வேறு எங்கும் இந்த நேர்த்திக் கடன் இல்லை என்றும், இதனை செய்வதன் மூலம் உடலில் உள்ள சரும நோய்கள் குணமாகும் என்று பக்தர்கள் கூறுகின் றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என குடும்பம் குடும்பமாக 1000-க்கும் மேற்பட்டோர் இந்த நேர்த்திக்கடனை செலுத்தினர். 
அக்கினிசட்டி
மேலும் ஏராளமானோர் அக்கினிச்சட்டி, பூப்பெட்டி பால்குடம், 101 சட்டி, 51 சட்டி, நாக்கில் வேல் குத்துதல் என தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். நூற்றுக் கணக்கானோர் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். சென்னை, காரைக்குடி என தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து இத்திருவிழாவை காண பக்தர்கள் வந்திருந்தனர். தினமும் இரவு முத்து மாரியம்மன் கோவில் திடல் முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

Next Story