தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு, பூ மார்க்கெட் பகுதியில் புதன்கிழமை நடைபாதை கடைகள் மற்றும் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு-பூ மார்க்கெட் பகுதியில் நேற்று நடைபாதை கடைகள் மற்றும் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் காமராஜர் காய்கனி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் இருப்பதால் தான் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. மேலும் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் அந்த மார்க்கெட் வழியாக வருவதால் பஸ்கள் திரும்ப முடியாமல் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கும் நிலையும் ஏற்பட்டு வந்தது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதையடுத்து நகரஅமைப்பு அதிகாரி ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று காலையில் ஜெயராஜ் ரோட்டில் உள்ள கடையின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த மேற்கூரைகள், செட்டுக்கள் மற்றும் நடைபாதை கடைகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
வியாபாரிகள் சாலைமறியல்
அப்போது சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மார்க்கெட் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
பூ மார்க்கெட்டிலும்...
இதை தொடர்ந்து தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் மாநகராட்சியினர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
மேலும் இதுபோல் மாநகராட்சி பகுதிகளில் வாரந்தோறும் புதன் கிழமை அன்று போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story