தீப்பெட்டி விலை பண்டலுக்கு ரூ.50 உயர்கிறது
வருகிற 1 ந் தேதி முதல் தீப்பெட்டி விலை பண்டலுக்கு ரூ 50 உயர்த்த உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
கோவில்பட்டி:
வருகிற 1-ந் தேதி முதல் தீப்பெட்டி விலை பண்டலுக்கு ரூ.50 உயர்த்த உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம் தலைமை தாங்கி, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் தீப்பெட்டி தொழிலை நம்பி நேராகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1-க்கு விற்பனை செய்த தீப்பெட்டியின் விலை ரூ.2-ஆக உயர்த்தப்பட்டது. இது ஓரளவுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு கை கொடுக்க தொடங்கிய நிலையில், கடந்த 3 மாதங்களில் மீண்டும் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே தீப்பெட்டி விலையை உயர்த்தி உள்ள நிலையில், அதனை உயர்த்த முடியாது.
ரூ.50 உயர்த்த முடிவு
எனவே, தீப்பெட்டி பண்டல்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, தீப்பெட்டி பண்டலுக்கு ரூ.50 உயர்த்தப்படுகிறது. 600 தீப்பெட்டி கொண்ட ஒரு பண்டல் ரூ.300 என விற்பனை செய்து வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் மொத்த வியாபாரிகளுக்கு ரூ.350-க்கு விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சங்க செயலாளர் சேதுரத்தினம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆர்.எஸ் சுரேஷ், நிறுவனர் என்.ராஜவேலு, துணை தலைவர்கள் ராஜூ, கோபால்சாமி, தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க இணை செயலாளர் வரதராஜன், பொருளாளர் செல்வமோகன், தங்கமணி, ஜோசப் ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story