வருகிற 1-ந் தேதி முதல் கா்நாடகத்தில் மின் கட்டணம் உயரும்


வருகிற 1-ந் தேதி முதல் கா்நாடகத்தில் மின் கட்டணம் உயரும்
x
தினத்தந்தி 23 March 2022 8:48 PM IST (Updated: 23 March 2022 8:48 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயா்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

பொருளாதார நெருக்கடி

  கர்நாடகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ந் தேதி மின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்த கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. பெங்களூரு மின் வினியோக நிறுவனம்(பெஸ்காம்) உள்பட மாநிலத்தில் உள்ள மின் வினியோக நிறுவனங்கள், நிர்வாக செலவு அதிகரித்துவிட்டதால் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.1.50 உயர்த்த வேண்டும் என்று மாநில அரசின் கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

  இதுகுறித்து அந்த ஆணையம் பொதுமக்களிடம் கருத்துகளை சேகரித்துள்ளது. அதன் அடிப்படையில் வருகிற 1-ந் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த அந்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு யூனிட்டுக்கு 35 முதல் 45 பைசா உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

மின் கட்டணம் உயருகிறது

  வாடகை செலுத்த முடியாமல் பொதுமக்கள் பலர் பெங்களூரு நகரை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். பலர் வாழ்க்கையை நடத்தவே தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை, சமையல் எண்ணெய் உள்பட உணவு தானியங்களின் விலை உயர்ந்து வருகிறது. மற்றொரு புறம் மின் கட்டணம் உயருகிறது. இதனால் சாமானிய மக்கள் மேலும் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story