எனது மகள் ‘எஸ்.சி.’ சாதி சான்றிதழ் பெற்றது உண்மை தான்; சட்டசபையில் ரேணுகாச்சார்யா ஒப்புதல்
லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எனது மகள் ‘எஸ்.சி.’ என சாதி சான்றிதழ் பெற்றது உண்மை தான் என்று சட்டசபையில் ரேணுகாச்சார்யா ஒப்புக்கொண்டார்.
பெங்களூரு:
தயாராக இருக்கிறேன்
கர்நாடக சட்டசபையில் நேற்று யு.டி.காதர், இந்து அல்லாத வியாபாரிகளுக்கு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆன்மிக தலங்களில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்காத விவகாரம் குறித்து பிரச்சினை கிளப்பினார். அப்போது பேசும்போது, பா.ஜனதா உறுப்பினர்கள் குறுக்கிட்டு பேசினர். அக்கட்சி உறுப்பினர் ரேணுகாச்சார்யாவும் பேசினார். அவரை நோக்கி யு.டி.காதர், ஒரு வார்த்தை பயன்படுத்தினார். அதை சபை குறிப்பில் இருந்து நீக்குமாறு மந்திரி மாதுசாமி கேட்டு கொண்டார். அதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். யு.டி.காதரும் அவற்றுக்கு சம்மதம் தெரிவித்தார்.
அப்போது பேசிய ரேணுகாச்சார்யா, ‘எனது மகள் எஸ்.சி. என சாதி சான்றிதழ் பெற்றது உண்மை தான். எனது சகோதரரும் அந்த சான்றை பெற்றார்.
அவர் கலபுரகியில் உமேஷ் ஜாதவுக்கு எதிராக போட்டியிட்டார். நான் அழுத்தம் கொடுத்து அவரை போட்டியில் இருந்து விலக வைத்தேன். எனது மகள் எஸ்.சி. சான்றிதழ் பெற்று இருந்தாலும், இதுவரை அதை வைத்து ஒரு சலுகையை கூட பெறவில்லை. எனது மகள் ஏதாவது சலுகை பெற்றதாக நிரூபித்தால், நான் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.
தர்ணா நடத்தினர்
அப்போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் பீமா நாயக், பரமேஸ்வர் நாயக், பிரியங்க் கார்கே ஆகியோர் பேச முயற்சி செய்தனர். அதற்கு சபாநாயகர் காகேரி அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து அந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். சித்தராமையா கேட்டுக் கொண்டதை அடுத்து அவர்கள் இருக்கைக்கு திரும்பினர்.
அதன்பிறகு பேசிய சித்தராமையா, ‘ரேணுகாச்சார்யா தனது மகளுக்கு எஸ்.சி. சாதி சான்றிதழை வாங்கியுள்ளார். இதுகுறித்து ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அவரே இதை ஒப்பு கொண்டுள்ளார். சலுகைகள் பெற்றாரா?, இல்லையா? என்பது வேறு.
தவறான தகவல்களை அளித்து சாதி சான்றிதழ் பெற்றதே சட்டவிரோதம். சட்டப்படி அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.
முதல்-மந்திரியின் அரசியல் செயலராளராகவும் அவர் உள்ளார். அவரே இந்த வேலையை செய்யலாமா?’ என்றார்.
சட்டப்படி நடவடிக்கை
இதற்கு பதிலளித்த சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி, ‘ரேணுகாச்சார்யாவின் மகள் எஸ்.சி. சாதி சான்றிதழ் பெற்றுள்ளார் என்று உறுப்பினர்கள் கூறினர். அவர் தவறு செய்திருந்தால் சட்ட ரீதியாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். அந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால் அவர் மீது சட்டப்படி
நடவடிக்கை எடுப்பார்’ என்றார். ரேணுகாச்சார்யா லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story