ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 2-வது மனைவி உள்பட 3 பேர் கைது; சொத்து பிரச்சினையில் தீர்த்துக்கட்டியது அம்பலம்


ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 2-வது மனைவி உள்பட 3 பேர் கைது; சொத்து பிரச்சினையில் தீர்த்துக்கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 23 March 2022 9:01 PM IST (Updated: 23 March 2022 9:01 PM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 2-வது மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சொத்து பிரச்சினையில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

பெலகாவி:

2-வது மனைவி கைது

  பெலகாவி அருகே பவானிநகர் பகுதியில் வசித்து வந்தவர் ராஜூ மல்லப்பா(வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் 3 பெண்களை திருமணம் செய்து செய்து இருந்தார். முதல் மனைவியும், அவரது 2 பிள்ளைகளும் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். 2-வது மனைவி மற்றும் அவருக்கு பிறந்த 2 குழந்தைகளுடன் ராஜூ வசித்து வந்தார். 3-வது மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி ராஜூ தனது காரில் பவானிநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது காரை வழிமறித்த மர்மநபர்கள், காரில் இருந்து ராஜூவை வெளியே பிடித்து இழுத்து கண்ணில் மிளகாய் பொடி தூவினர். பின்னர் ஆயுதங்களால் தாக்கி ராஜூவை கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ராஜூவை கொலை செய்ததாக அவரது 2-வது மனைவி கிரணாலா, ராஜூவின் தொழில் கூட்டாளிகள் தர்மேந்திரா, சசிகாந்த் ஆகியோரை பெலகாவி புறநகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

கூலிப்படை ஏவி கொலை

  அதாவது ராஜூ 3-வது திருமணம் செய்தது கிரணாலாவுக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது தனக்கும், 2 பிள்ளைகளுக்கும் சொத்தை பிரித்து தரும்படி கிரணாலா கேட்டுள்ளார். ஆனால் சொத்தை பிரித்து கொடுக்க ராஜூ மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கிரணாலா, ராஜூவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அப்போது தொழில் விஷயம் தொடர்பாக ராஜூவுக்கும், தர்மேந்திரா மற்றும் சசிகாந்த் இடையே பிரச்சினை இருந்தது தெரியவந்தது.
  
இதனால் அவர்களுடன் சேர்ந்து ராஜூவை கொலை செய்ய கிரணாலா திட்டம் தீட்டினார். தர்மேந்திரா, சசிகாந்த் உதவியுடன் கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் கொடுத்து அவர்கள் மூலம் ராஜூவை தீர்த்துக்கட்டியதும் அம்பலமாகி உள்ளது. கைதான 3 பேர் மீதும் பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையினரை போலீசார் தேடிவருகின்றனர்.


Next Story