முதுமலையில் புள்ளிமானை வேட்டையாடி தூக்கிச்சென்ற புலி சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்
முதுமலையில் புள்ளிமானை வேட்டையாடி புலி தூக்கிச்சென்றது. அதை சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
கூடலூர்
முதுமலையில் புள்ளிமானை வேட்டையாடி புலி தூக்கிச்சென்றது. அதை சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
புலிகள் காப்பகம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு புலி, காட்டு யானை, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால், மான்கள், காட்டெருமைகள் பசுந்தீவனம் தேடி சாலையோரத்தில் நடமாடி வருகிறது.
இதனால் அவற்றை வேட்டையாட புலி, சிறுத்தைப்புலிகள் சாலை யோரத்தில் வருவதை அடிக்கடி காண முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரையை வேட்டையாட சாலையோரத்தில் ஒரு புலி படுத்து கிடந்தது. அதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
மானை வேட்டையாடிய புலி
இந்த நிலையில் முதுமலை தெப்பக்காடு பகுதியில் வனஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனத்துறை உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது அந்த சாலையோரத்தில் மான்கள் மேய்ந்து கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் திடீரென்று அங்கு பாய்ந்து வந்த ஒரு புலி, புள்ளிமானை வேட்டையாடியது.
பின்னர் அதை தூக்கி புதருக்குள் கொண்டு சென்றது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் இந்த காட்சியை தங்களது செல்போன்கள் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுத்தனர்.
அத்துடன் சிலர் செல்போனில் வீடியோவும் எடுத்தனர். பிறகு அதை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதனால் அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, புலியை கூண்டில் அடைத்து பூங்காவில் வைத்து இருப்பதை பார்க்கும் போதே பயமாக இருக்கும். ஆனால் அது வனப்பகுதியில் கம்பீரமாக நடந்து வந்து, இரையை வேட்டையாடி தூக்கிச்சென்றதை பார்த்தபோது பயமாகதான் இருந்ததுஎன்றனர்.
Related Tags :
Next Story