பராமரிப்பு பணிக்கு சென்ற தொழிலாளர்களை திருப்பி அனுப்பிய கேரள போலீசார்


பராமரிப்பு பணிக்கு சென்ற தொழிலாளர்களை திருப்பி அனுப்பிய கேரள போலீசார்
x
தினத்தந்தி 23 March 2022 9:56 PM IST (Updated: 23 March 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்கு சென்ற தொழிலாளர்களை கேரள போலீசார் திருப்பி அனுப்பினர்.

தேனி: 

முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்கு கேரள வனத்துறையினர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேக்கடியில் உள்ள அணையின் உபகோட்ட அலுவலக மராமத்து பணிக்கு பொருட்களை எடுத்துச் சென்ற வேனுக்கு கேரள வனத்துறை சோதனை சாவடியில் அனுமதி மறுக்கப்பட்டது. 

4-வது நாளில் அனுமதி அளிக்கப்பட்டு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் முல்லைப்பெரியாறு அணையின் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக தொழிலாளர்கள் சிலருடன் தமிழக பொதுப்பணித்துறை அலுவலர்கள் அணைக்கு செல்வதற்காக தேக்கடிக்கு வந்தனர். அப்போது தேக்கடி வனத்துறை சோதனை சாவடியில் பணியில் இருந்த கேரள மாநில போலீசார், அந்த தொழிலாளர்களுக்கு அனுமதி மறுத்தனர். 

அணை பகுதியில் பாதை சீரமைப்பு, குடியிருப்பு பராமரிப்பு பணிகளுக்காக செல்வதாக கூறிய போதிலும், முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறி தமிழக தொழிலாளர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். 

முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்கு கேரள வனத்துறையினர் முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில், தற்போது கேரள போலீசாரும் முட்டுக்கட்டை போடத் தொடங்கி உள்ளதால், அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

Next Story