பாலியல் புகாரில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
குஜிலியம்பாறையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திண்டுக்கல்:
பாலியல் தொல்லை புகார்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
அதன் பேரில் பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி, வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் கீதா மற்றும் அதிகாரிகள் கடந்த 18-ந்தேதி மாணவிகளை தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் பாளையம் பகுதியை சேர்ந்த பாலுச்சாமி (வயது 37) என்பவர் தான், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மாணவிகள் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பணியிடை நீக்கம்
இதற்கிடையே மாதர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் மாணவிகளின் புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஆசிரியர் பாலுச்சாமியை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் மீதான புகார் குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையின் முடிவில் அவர் தவறு செய்திருப்பது தெரியவந்தால், மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். அதேநேரம் அவர் மீதான புகார் நிரூபணம் ஆகாவிட்டால் அவருக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story