கடையில் இருந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு


கடையில் இருந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 23 March 2022 10:29 PM IST (Updated: 23 March 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் கடையில் இருந்த மூதாட்டியை தாக்கி, ‘சிகரெட்’ வாங்குவது போல் நடித்து 3 பவுன் நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

குளச்சல்:
குளச்சலில் கடையில் இருந்த மூதாட்டியை தாக்கி, ‘சிகரெட்’ வாங்குவது போல் நடித்து 3 பவுன் நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 
மூதாட்டி
குளச்சல் வண்ணாத்திவிளை நரிக்கல் சாலையை சேர்ந்தவர் சத்தியநேசன். இவருடைய மனைவி ரோஸ்லி (வயது 70). இவர் தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று மதியம் ரோஸ்லி கடையில் இருந்தார். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கடையில் இருந்த ரோஸ்லியிடம் ‘சிகரெட்’ கேட்டனர். ரோஸ்லியும் கடைக்குள் திரும்பி சிகரெட்டை எடுத்துக் கொண்டிருந்தார். 
நகைப்பறிப்பு
அப்போது, திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர்கள் ரோஸ்லி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ரோஸ்லி நகையை பிடித்துக் கொண்டு திருடன்... திருடன் என்று கூச்சல் போட்டார். உடனே, அந்த வாலிபர்கள் ரோஸ்லியின் வாயை பொத்தி, தாக்கி நகையை பறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்
இதுகுறித்து ரோஸ்லி குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் கடையில் இருந்த மூதாட்டியை தாக்கி நகை பறித்த சம்பவம் குளச்சல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story