கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை


கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 23 March 2022 11:02 PM IST (Updated: 23 March 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன்களில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சின்னமனூர்: 

சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கல்பட்டியில் கோபால்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் வெள்ளையம்மாள்புரம், மூர்த்திநாயக்கன்பட்டி, சுக்காங்கல்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இதற்கிடையே கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகளுக்கு கூடுதல் தொகைக்கு தனியார் அடகு கடையில் வைத்திருப்பதாக பொதுமக்களுக்கு நோட்டீஸ் நேற்று வந்தது. இதனால் பொதுமக்கள் திரண்டு வந்து கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டனர். அவர்கள் முன்னுக்குபின், முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த ஓடைப்பட்டி போலீசார், உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜூனன் மற்றும் கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த சில தினங்களாக அடகு நகைகளை திருப்ப சென்றால் அலைக்கழித்தனர். மேலும் நகை கடன் தள்ளுபடி குறித்து விவரம் கேட்டால் சங்க நிர்வாகிகள் அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. மேலும் வைப்பு தொகை செலுத்தியவர்களுக்கு அவர்கள் பெயரில் பணம் இல்லாமல் பூஜ்ஜியம் என இருக்கிறது. கூட்டுறவு கடன் சங்கத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எங்களது அடகு நகைகள் குறித்து விவரம் அறியவேண்டும் என்றனர்.  

அதற்கு அதிகாரிகள், நகை கடன்கள் குறித்து கூட்டுறவு கடன் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருப்பினும் உடனடியாக புகார் ெகாடுக்கலாம். அதன்பேரில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story