அஞ்செட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண் கழுத்தை அறுத்து கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரும் தற்கொலை


அஞ்செட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண் கழுத்தை அறுத்து கொலை  வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரும் தற்கொலை
x
தினத்தந்தி 23 March 2022 11:18 PM IST (Updated: 23 March 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2-வது திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கொடகரை அருகே உள்ள மேல்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா (வயது35). கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.  
ராஜம்மாள் இறந்து விட்டதால் பசப்பா, அதேபகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மாதேவம்மா(25) என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். 
கழுத்தை அறுத்து கொலை
இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் பசப்பா சந்தேகமடைந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் வழக்கம்போல அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 
இதனால் ஆத்திரமடைந்த பசப்பா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாதேவம்மாவின் கழுத்தை  அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மனைவி இறந்ததை அறிந்ததும் பசப்பா அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். 
கணவர் தற்கொலை
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அஞ்செட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட மாதேவம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் தலைமறைவான பசப்பாவை தேடி வந்தனர். 
இந்த நிலையில் கொச்சாவூர் அருகே உள்ள வனப்பகுதியில் பசப்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பசப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பரபரப்பு
இது தொடர்பாக அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். 
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 2-வது மனைவியான புதுப்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொச்சாவூர் கிராமத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story