கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் லாரியில் தூக்கில் பிணமாக தொங்கிய டிரைவர்-கொலையா? போலீசார் விசாரணை
வெப்படையில் லாரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் டிரைவர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளிபாளையம்:
லாரி டிரைவர்
தென்காசியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 29). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்துக்கு சிமெண்டு மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டு வந்தார். பின்னர் அவற்றை வெப்படை அருகே சவுதாபுரத்தில் உள்ள ஒரு தனியார் குடோனில் இறக்கினார். இரவானதால் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு, அதில் படுத்து கொண்டார்.
இந்தநிலையில் நேற்று காலை லாரியின் பின்பக்கம் லோடு ஏற்றும் பகுதியில் மகேந்திரன் லுங்கியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். மேலும் அவரது கை, கால்களும் கட்டப்பட்டிருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெப்படை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
கொலையா? போலீசார் விசாரணை
அதன்பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகேந்திரன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என போலீசார் கருதுகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெப்படையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் லாரியில் டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story