மீன்பிடி திருவிழாவில் மீன்களை பிடித்து மகிழ்ந்த கிராம மக்கள்


மீன்பிடி திருவிழாவில் மீன்களை பிடித்து மகிழ்ந்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 23 March 2022 11:19 PM IST (Updated: 23 March 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருேக மீன்பிடி திருவிழாவில் மீன்களை பிடித்து கிராம மக்கள் மகிழ்ந்தனர்.

திருப்பத்தூர், 
திருப்பத்தூர் அருேக மீன்பிடி திருவிழாவில் மீன்களை பிடித்து கிராம மக்கள் மகிழ்ந்தனர்.
மீன் குஞ்சுகள்
திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோளக்குடி. இந்த கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் கடந்த பருவ மழையின் போது கண்மாய் நிரம்பி காட்சியளித்தது. இதையடுத்து இந்த கண்மாயில் அப்போது மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டு வளர்க்கப்பட்டது. 
தற்போது கோடைக்காலம் தொடங்கியதால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கண்மாய்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு வருகிறது. இதையடுத்து இந்த கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றி வறண்டு வரும் வேளையில் ஏற்கனவே வாங்கி விடப்பட்ட மீன்குஞ்சுகள் வளர்ந்த நிலையில் நேற்று இந்த கண்மாயில் அடுத்தாண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிராம மக்கள் கலந்து கொண்ட மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
திருக்கோளக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் அதிகாலை 5 மணி முதல் கண்மாய்க்கு ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி சாதனங்களுடன் வரத்தொடங்கினர். 
அதன் பின்னர் காலை 6 மணிக்கு கண்மாயில் மீன்பிடிக்க ஊர்தலைவர் கொடி அசைத்தவுடன் அங்கு மீன்பிடி வலையுடன் காத்திருந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்க தொடங்கினர்.
மீன் குழம்பு வாசம் கமகமத்தது
இதில் சிறுவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் கண்மாயில் இறங்கி தாங்கள் பிடித்த மீன்களை கொண்டு வந்த பாத்திரங்கள் மற்றும் கூடைகளில் அள்ளிச்சென்றனர்். கெளுத்தி, கெண்டை, ஜிலபி கெண்டை ஆகிய மீன்கள் அதிக அளவில் கிடைத்தது. அந்த பகுதியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றதை அடுத்து அந்த பகுதி முழுவதும் மீன் குழம்பு வாசம் கமகமத்தது.

Next Story