சட்டசபை முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 25 ஊராட்சி மன்ற தலைவர்கள்
ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்று கூறி சட்டசபை முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பண்ருட்டியில் இருந்து செல்ல முயன்ற 25 ஊராட்சி மன்ற தலைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், இதனால் பொதுமக்களுக்கு எந்தவித திட்ட பணிகளையும் செயல்படுத்த முடியவில்லை என்றும், வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயா, மேலாளரை உடனடியாக பணிமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளிப்பது, அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து மனு அளிப்பதுடன், சட்டசபை முன்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து 25 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று காலை சென்னைக்கு புறப்பட தயாரானார்கள்.
தடுத்து நிறுத்திய போலீசார்
இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு தெரியவந்ததும் அவரது உத்தரவின்படி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், நந்தகுமார், அசோகன், ராஜேந்திர பாண்டியன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் அண்ணாகிராமம் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தற்போது சட்டசபை கூட்டம் நடைபெறும் இந்த வேளையில் சென்னைக்கு செல்ல வேண்டாம் எனக்கூறி சமாதானம் செய்தனர்.
சமாதான கூட்டம்
இதன் பின்னர் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார், செயலாளர் ரத்தினவேல், ஆறுமுகம், ரஞ்சித்குமார், ராமதாஸ், ஜோதி, ராஜா, ரகுநாதன், ரமேஷ் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் 25 பேருடன் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமை தாங்கினார். தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தோஷ்குமார், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிதி ஏதும் வரவில்லை
கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் தரப்பில் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக மாநில நிதி ஏதும் வரவில்லை. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைவான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை. நூலக பழுதுநீக்கம், ஒப்பந்த பணி ஆகியவை ஊராட்சி தலைவர்களுக்கு எதிராக நடக்கிறது. சொந்த பணத்தை செலவு செய்து தான் ஊராட்சியில் நிர்வாகம் செய்ய வேண்டியுள்ளது என சராமரியாக புகார் அளித்தனா்.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா பேசுகையில் மக்கள் பிரச்சினைக்காக சென்னையில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அங்கு செல்ல தேவையில்லை. நாளை (அதாவது இன்று) அண்ணாகிராம வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி, உதவி இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என உறுதியளித்தார்.
பரபரப்பு
இதனால் சமாதானம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும், அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story