கீரமங்கலம் பகுதியில் சமவெளியில் மிளகு சாகுபடி கல்லூரி மாணவிகள் அறுவடை திருவிழா நடத்தினார்கள்
கீரமங்கலம் பகுதியில் சமவெளியில் பயிரிடப்பட்டுள்ள மிளகு தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. வேளாண்மை கல்லூரி மாணவிகள் அறுவடை திருவிழா நடத்தினார்கள்.
கீரமங்கலம்:
சமவெளியில் மிளகு சாகுபடி
குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் மட்டுமே மிளகு சாகுபடி செய்யலாம் என்பதை மாற்றி சமவெளியிலும் வறண்ட பூமியிலும் தரமான மிளகு விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதி விவசாயிகள். ரசாயன உரம் பூச்சிக்கொல்லி மருந்து ஏதுமின்றி இயற்கை உரம், குறைவான தண்ணீர், மரப்பயிர்களுக்குள் ஊடு பயிராக பயிரிடப்படும் மிளகு தரமாகவும், அதிக மகசூலும் கிடைப்பதாக கூறும் விவசாயிகள் இதே போல ஏலக்காய், திராட்சை கூட விளைகிறது என்கிறார்கள்.
அறுவடை திருவிழா
சமவெளியில் மிளகு விவசாயம் செய்யும் சேந்தன்குடி, கீரமங்கலம், பட்டிபுஞ்சை, மாங்காடு, வடகாடு, அணவயல் பகுதிக்கு வெளியூர் விவசாயிகளும், விவசாயக்கல்லூரி மாணவர்களும் வந்து அனுபவமிக்க விவசாயிகளிடம் பயிற்சி பெற்றுச் செல்கிறார்கள். இந்தவகையில் தற்போது குடுமியான்மலை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சேந்தன்குடி விவசாயி செந்தமிழ்செல்வனின் மிளகு தோட்டத்தில் தங்கியிருந்து களப்பயிற்சி பெற்று வருகின்றனர்.
தற்போது மிளகு அறுவடைக்கு தயாராகி உள்ளதால் கல்லூரி மாணவிகள் அறுவடை திருவிழாவும் நடத்தினார்கள். இதுகுறித்து வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் கூறுகையில், குளிர்ச்சியான பகுதியில் மட்டுமே விளையும் மிளகு சமவெளிப் பகுதியிலும் மரங்களுக்குள் ஊடுபயிராக நடவு செய்து ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து இல்லாமல் முழுமையாக இயற்கை முறையிலேயே உற்பத்தி செய்து அதிக மகசூல் பெறுகின்றனர். இந்த மிளகு காரம் அதிகமாக உள்ளது. பனீர், கரிமுண்டா போன்ற பல ரக மிளகுகளை உற்பத்தி செய்வதுடன் விவசாயிகளுக்கு மிளகு நாற்று விடும் பயிற்சியும் கொடுக்கிறார்கள் என்றனர்.
Related Tags :
Next Story