கர்நாடகத்தில் அரசு பணி, கல்வி, வேலை வாய்ப்புகளில் பழங்குடியினருக்கு 7½ சதவீத இட ஒதுக்கீடு; அனைத்து கட்சி கூட்டத்தில் ஒப்புதல்


கர்நாடகத்தில் அரசு பணி, கல்வி, வேலை வாய்ப்புகளில்  பழங்குடியினருக்கு 7½ சதவீத இட ஒதுக்கீடு; அனைத்து கட்சி கூட்டத்தில் ஒப்புதல்
x
தினத்தந்தி 24 March 2022 1:37 AM IST (Updated: 24 March 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் அரசு பணி, கல்வி, வேலை வாய்ப்புகளில் பழங்குடியினருக்கு 7½ சதவீதமாக இடஒதுக்கீடு உயர்த்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது

பெங்களூரு: கர்நாடகத்தில் அரசு பணி, கல்வி, வேலை வாய்ப்புகளில் பழங்குடியினருக்கு 7½ சதவீதமாக இட ஒதுக்கீடு உயர்த்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 

அனைத்துக்கட்சி கூட்டம்

சுப்ரீம் கோர்ட்டு, கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பிற்படுத்தப்பட்ட பிாிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக தீர்ப்பு கூறியுள்ளது. இந்த நிலையில் கிராம மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசிக்க கர்நாடக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

இதில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, சட்டத்துறை மந்திரி மாதுசாமி, போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு, நகர வளர்ச்சி துறை மந்திரி பைரதி பசவராஜ், ஜனதா தளம்(எஸ்) குழு துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மேல்முறையீடு

கர்நாடகத்தில் கிராம மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு புதிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இதனால் அந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு இன்று (நேற்று) கூட்டியது.
இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, வேறு அவசர பணிகள் காரணமாக கலந்து கொள்ளவில்லை. 

ஜனதா தளம்(எஸ்) கட்சி துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். இதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது தொடர்பாக ஒரு கமிஷனை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த 2 அம்சங்களில் ஒரு முடிவு எடுக்கப்படும்.

பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு

எதிர்க்கட்சி தலைவர் இல்லாததால் இன்று(நேற்று) இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மீண்டும் ஒருமுறை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதமாக உயர்த்துமாறு அந்த சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அதுகுறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து முன்னாள் நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை அரசிடம் வழங்கியுள்ளது. அந்த குழு, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையின்படி அந்த மக்களுக்கு நீதி வழங்கப்படும். அதாவது இட ஒதுக்கீடு உயர்த்தப்படும். இதற்கு அனைத்துக்கட்சியினரும் ஒப்பு கொண்டுள்ளனர்.

இறுதி முடிவு

ஆனால் இதற்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளது. சட்ட ரீதியாக உள்ள சாதக-பாதகங்கள் குறித்து ஆலோசித்து அறிக்கை வழங்கும்படி அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

நடிகர் புனித்ராஜ்குமார் நடித்த ஜேம்ஸ் படம் தியேட்டர்களில் ஓடி கொண்டிருக்கிறது. இதை கட்டாயப்படுத்தி எடுக்குமாறு சிலர் கூறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கர்நாடக சினிமா வர்த்தக சபை நிர்வாகிகளிடம் பேசி, அவ்வாறு யாராவது அந்த படத்தை எடுக்குமாறு கட்டாயப்படுத்தினால் அதற்கு எதிராக நீங்கள் முடிவு எடுக்க முடியும் என்று கூறினேன். மேலும் சிவராஜ்குமாரிடமும் பேசியுள்ளேன். அந்த படத்தை எடுக்குமாறு யாராவது அழுத்தம் கொடுத்தால் அதுகுறித்து எனது கவனத்திற்கு கொண்டு வருமாறு கூறியுள்ளேன். இதிலும் காங்கிரசார் அரசியல் செய்கிறார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story