போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்தவரால் பரபரப்பு
போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சுத்துக்குளம் கிராமத்தில் பிரசித்திபெற்ற முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத திருவிழாவோடு மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கோவில் திருவிழா மற்றும் மஞ்சுவிரட்டுக்கான ஏற்பாடுகளை கடந்த 15-ந் தேதி கிராம மக்கள் செய்திருந்தனர்.
ஆனால், கோவில் திருவிழாவுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்த தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்துவதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை அக்கிராம மக்கள் செய்திருந்தனர்.
தாசில்தார் மீது தாக்குதல்
இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விழா கமிட்டியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
இதனால், ஆத்திரமடைந்த அக்கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தாசில்தார் வந்த ஜீப்பின் கண்ணாடியை உடைத்ததுடன் அவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் தாசில்தாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விஷம் குடித்தார்
இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி 47 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணனை(வயது 43) பிடிக்க அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால், இதனை எப்படியோ அறிந்து கொண்ட கமலக்கண்ணன் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் போலீஸ் நிலையம் முன்பு வைத்து விஷத்தை குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீன்சுருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடிதம் சிக்கியது
அவர் விஷம் குடிப்பதற்கு முன்பாக ஒரு கடிதம் எழுதி பாக்கெட்டில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், தான் விஷம் குடிப்பதற்கு தாசில்தார், போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தான் காரணம் என எழுதி வைத்திருந்ததாக தெரிகிறது. மேலும், இதுதொடர்பாக வீடியோ பதிவு ஒன்றையும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சுத்துக்குளம் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story