விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகளுக்கு தேர்வு-ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ- மாணவிகளுக்கு தேர்வு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
சேலம்:
விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ- மாணவிகளுக்கு தேர்வு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தேர்வு போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தங்கி பள்ளிப்படிப்பையும், விளையாட்டு பயிற்சிலும் ஈடுபடலாம். இதற்காக வருடம் ஒருமுறை மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆய்வாளர் நிர்மலாதேவி கலந்து கொண்டு தேர்வு போட்டியை தொடங்கி வைத்தார்.
விளையாட்டு விடுதிகள்
இதில் 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துப்பந்து, பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ ஆகிய விளையாட்டுகளுக்கு தேர்வு நடந்தன.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் கூறியதாவது:-
மாணவர்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சை, அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், விழுப்புரம், நெய்வேலி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன. அதே போன்று மாணவிகளுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் விடுதிகள் உள்ளன.
இந்த விடுதிகளில் சேர்வதற்கான தேர்வில் 155 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தேர்வு பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவார்கள். அதில் தேர்வு பெறுபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விளையாட்டு விடுதி்களில் இடம் ஒதுக்கப்படும்.
இவ்வாறு சிவரஞ்சன் கூறினார்.
Related Tags :
Next Story