நெல்லை: வாலிபரிடம் ரூ.11.46 லட்சம் மோசடி


நெல்லை: வாலிபரிடம் ரூ.11.46 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 24 March 2022 2:37 AM IST (Updated: 24 March 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரிடம் ரூ.11.46 லட்சம் மோசடி செய்த 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்

நெல்லை:
பாளையங்கோட்டை சாராள் டக்கர் கல்லூரி ரோட்டிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பக்கீர் முகமது. இவருடைய தாயார் சைத்தூன் பீவி. இவர்கள் 2 பேரும் ஆன்லைன் சூப்பர் மார்க்கெட் தொடங்க போவதாகவும், அதற்கு மாவட்ட வாரியாக வினியோகஸ்தர்கள் தேவைப்படுவதாகவும், தங்களது ஆன்லைன் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறி சமூக வலைதளத்தில் தகவல் செய்தனர். இதனை அறிந்த நெல்லை சுத்தமல்லி பகுதியை சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா (வயது 34), பக்கீர் முகமதுவிடம் நேரில் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது தங்களது நிறுவனத்தில் வினியோகஸ்தராக சேருவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று பக்கீர் முகமது, சைத்தூன் பீவி ஆகியோர் தெரிவித்தனர். இதனை உண்மை என்று நம்பிய சிக்கந்தர் பாதுஷா ரூ.11 லட்சத்து 46 ஆயிரத்து 500-ஐ பல தவணைகளாக அவர்களிடம் வழங்கினார். பணத்தை பெற்று கொண்ட பக்கீர் முகமது, சைத்தூன் பீவி ஆகிய 2 பேரும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றினர். பின்னர் அவர்கள் தலைமறைவானார்கள்.
இந்தநிலையில் தன்னை நூதன முறையில் ஏமாற்றியதை அறிந்த சிக்கந்தர் பாதுஷா, இதுகுறித்து நெல்லை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியோ வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பக்கீர் முகமது, சைத்தூன் பீவி ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story