ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ வழக்கில் இளம்பெண் மனுக்கள் மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ வழக்கில் இளம்பெண் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
பெங்களூரு: முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ வழக்கில் இளம்பெண் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இளம்பெண் சார்பில் 2 மனுக்கள்
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியும், ஒரு இளம்பெண்ணும் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி கடந்த ஆண்டு (2021) பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளி குற்றமற்றவர் என சிறப்பு விசாரணை குழு போலீசார், கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இளம்பெண் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு விசாரணை குழு அமைத்ததை ரத்து செய்யவும், ரமேஷ் ஜார்கிகோளி கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரியும் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் இளம்பெண் சார்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
விசாரணை நாளை ஒத்திவைப்பு
அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது இளம்பெண் தரப்பில் ஆஜரான வக்கீல், ரமேஷ் ஜாா்கிகோளி எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாக பிரசன்னா, இது மக்கள் பிரதிநிதி சம்பந்தப்பட்டு இருப்பதால், நான் விசாரணை நடத்தலாம் என்பது குறித்து பரிசீலிப்பதாக கூறினார்.
பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு அவர் ஏற்றுக் கொண்டார். இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 25-ந் தேதி (அதாவது நாளை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story