மரவள்ளி மாவு பூச்சியை ஒட்டுண்ணி மூலம் கட்டுப்படுத்த ஆய்வு


மரவள்ளி மாவு பூச்சியை ஒட்டுண்ணி மூலம் கட்டுப்படுத்த ஆய்வு
x
தினத்தந்தி 24 March 2022 6:53 PM IST (Updated: 24 March 2022 6:53 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து வந்த மரவள்ளி மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவை வேளாண் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் பிரபாகர் தெரிவித்தார்

தூத்துக்குடி:
வெளிநாட்டில் இருந்து வந்த மரவள்ளி மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவை வேளாண் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் பிரபாகர் தெரிவித்தார்.
உழவர் பெருவிழா
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு மக்காச்சோளம் படைப்புழு மேலாண்மை திட்டத்தின் கீழ் நிதியுதவி அளித்து உள்ளது. அதன் மூலம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் மண்டல கருத்தரங்கு மற்றும் உழவர் பெருவிழா நடத்தப்பட்டது. 
விழாவுக்கு கோவை வேளாண் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் பிரபாகர் தலைமை தாங்கி மக்காச்சோளம் பயிரில் ஒருங்கிணந்த படைப்புழு மேலாண்மை, தென்னை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் மேலாண்மை குறித்த தொழில்நுட்ப கையேடுகளை வெளியிட்டு பேசினார். பூச்சியியல் துறை பேராசிரியர் அப்துல்ரசாக் வரவேற்று பேசினார். கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் கிருஷ்ணமூர்த்தி திட்டம் குறித்து விளக்கி பேசினார். 
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், நெல்லை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் டேவிட் டென்னிசன், கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஊமைத்துரை ஆகியோர் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் இறைவன் அருட்கனி அய்யநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள் இணைந்து செயல்படுவதன் மூலம் வேளாண் உற்பத்தியை பெருக்க முடியும். தொன்மாவட்டத்தின் முக்கிய பயிர்களான தென்னை, வாழை, நெல், காய்கறிகள், பனை மற்றும் அதனை சார்ந்த பொரு்களின் மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.
ஆய்வு
விழாவில் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குனர் பேசும் போது, வெளிநாட்டு பூச்சிகளான தென்னை இரியோபிட் சிலந்தி, பப்பாளி மாவு பூச்சி, மக்காச்சோள படைப்புழு மற்றும் தென்னை ரூகோஸ் சுருள்வெள்ளை ஈ, மரவள்ளி மாவுப்பூச்சி ஆகியவை தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. மக்காச்சோள படைப்புழு தாக்குதலை தடுக்க நவீன தொழில் நுட்பங்களான ஆளில்லா விமானம் மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தெளிக்கலாம். மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்த 7 தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கோடை உழவு, கடைசி உழவின் போது வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இடுதல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து விதைநேர்த்தி செய்தல், தட்டை பயறு, எள், சூரியகாந்தி, துவரை போன்ற பயிர்களை வயல்களின் ஓரத்தில் விதைத்தல், ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறி வைத்தல், டெலினோமஸ் ஒட்டுண்ணிகளை விடுதல் மற்றும் பூச்சிக் கொல்லிகளை சரியான பயிர் பருவத்தில் தெளித்தல் உள்ளிட்ட முறைகளை கடைபிடித்தால் மக்காச்சோளம் பயிரை பூச்சியில் இருந்து பாதுகாத்து மகசூலை பெருக்க முடியும். இதே போன்று மரவள்ளி மாவு பூச்சி சமீபத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க வெளிநாட்டில் இருந்து ஒட்டுண்ணியை இறக்குமதி செய்து, ஆய்வகத்தில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு, பூச்சியை கட்டுப்படுத்துவதற்காக மரவள்ளி கிழங்கு வயல்களில் விட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.
கண்காட்சி
விழாவில் பங்கேற்ற விவசாயிகள், அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை பார்வையிட்டனர். வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் இடையேயான கலந்துரையாடல் நடந்தது. நிகழ்ச்சியில் தோட்டக்கலை பேராசிரியர் ரிச்சர்டு கென்னடி, மண்ணியல் துறை பேராசிரியர் ஜோதி மணி, பயிர் நோயியல் துறை பேராசிரியர் ஏசுராஜ், பயிர் வினையியல் இணை பேராசிரியர் சீனிவாசன், வேளாண் பூச்சியியல் இணை பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொழில்நுட்பம் குறித்து விளக்கி பேசினர். விழாவில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story