பணி நிரந்தரம் செய்யக்கோரி காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் மீனவர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் மீனவர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்
x
தினத்தந்தி 24 March 2022 8:07 PM IST (Updated: 24 March 2022 8:07 PM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வரும் மீனவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று நிறுவனத்தின் முன்பு குடும்பத்தினருடன் போராட்டம் நடத்த முயன்ற 207 பேரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம்

மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி காமராஜர் மீனவ கிராமம் கடலோரத்தில் அமைந்துள்ளது. இங்கு தனியார் கப்பல் கட்டும் நிறுவனம் தொடங்குவதற்காக மீனவ கிராமத்தை வேறு இடத்திற்கு மாற்ற 140 குடும்பத்தினருக்கு வேறு இடத்தில் வீடு கட்டிக் கொடுத்து மேலும் குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை வழங்குவதாக கூறி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

இவர்களுக்கு முறையான ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. மேலும் 13 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருபவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. பலமுறை போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து தி.மு.க. அரசு பதவி ஏற்ற நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்கக்கோரி தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கடந்த மாதம் மீனவர்கள் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மீனவர்கள் 140 பேர் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று காலை நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

207 பேர் கைது

தகவலறிந்த சென்னை ஆவடி மாநகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 207 பேரை கைது செய்து மீஞ்சூரில் உள்ள 2 தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். தகவலறிந்த பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் போலீசாரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தனியார் நிறுவனத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் பொன்னேரி எம்.எல்.ஏ. பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதம் கொடுத்த நிலையில் நேற்று மாலை மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டுமெனவும் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் இன்று அனுமதி கிடைத்தால் இது குறித்து பேசுவேன் என்றும் உங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 28-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் கலந்து கொண்டு காட்டுப்பள்ளி மீனவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஏற்று மீனவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story