ரெயிலில் ஓசி பயணம் ரூ.200 கோடி அபராதம் வசூல் மத்திய ரெயில்வே தகவல்
மத்திய ரெயில்வேயில் கடந்த ஒரு ஆண்டில் ரெயிலில் ஓசிப்பயணம் செய்த பயணிகளிடம் இருந்து ரூ.200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மத்திய ரெயில்வேயில் கடந்த ஒரு ஆண்டில் ரெயிலில் ஓசிப்பயணம் செய்த பயணிகளிடம் இருந்து ரூ.200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரூ.200 கோடி
மத்திய ரெயில்வேயில் டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ரெயில் நிலையங்களில் எந்த நேரமும் டிக்கெட் பரிசோதகர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மத்திய ரெயில்வேயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து அதிகளவில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த மாதம் இதுநாள்வரை ஒரு ஆண்டில் மத்திய ரெயில்வேயில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 33 லட்சத்து 30 ஆயிரம் பயணிகளிடம் இருந்து ரூ.200 கோடியே 85 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மற்ற எல்லா ரெயில்வே கோட்டங்களிலும் வசூலானதை விட அதிக தொகை ஆகும். கொரோனா ஊரடங்கிற்கு மத்தியிலும் அதிகளவில் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை அதிகம்
மத்திய ரெயில்வேயை பொறுத்தவரை அதிகபட்சமாக மும்பை கோட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 12.93 லட்சம் பேரிடம் இருந்து ரூ.66. 88 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர புஷாவல் கோட்டத்தில் ரூ.58.75 கோடியும், நாக்பூர் கோட்டத்தில் ரூ.33.32 கோடியும், சோலாப்பூரில் ரூ.19.42 கோடியும், புனேயில் ரூ.10.05 கோடியும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தலைமையக டிக்கெட் பரிசோதனை குழுவும் 1.80 லட்சம் பேரிடம் இருந்து ரூ.12.47 கோடி அபராதம் வசூலித்து உள்ளது. இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story