சாய்பாபா சிலையை சேதப்படுத்திய கோவில் பூசாரி கைது


சாய்பாபா சிலையை சேதப்படுத்திய கோவில் பூசாரி கைது
x
தினத்தந்தி 24 March 2022 9:06 PM IST (Updated: 24 March 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

சாய்பாபா சிலையை சேதப்படுத்திய கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார்

மார்ச்.24-
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த சந்துரு, திண்டிவனம்- புதுச்சேரி நான்கு வழிச்சாலை இரும்பை மெயின்ரோட்டில் சாய்பாபா  கோவில்   வைத்துள்ளார்.  இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக ஜெய்ப்பூரில் இருந்து சாய்பாபா சிலையை வாங்கி வைத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாய்பாபா சிலையின் தலை துண்டித்து, தீவைத்து எரிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி கோவில் நிர்வாகி சந்துரு ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சாய்பாபா கோவில் பூசாரி சாய்குமார் தான் சாய்பாபா சிலையை உடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், தற்போதுள்ள கோவிலில் 3 அடி உயரத்தில் சித்தர் சாய்பாபா சிலை உள்ளது. இந்த சிலைக்கு சக்தி அதிகம். புதியதாக கட்டப்படும் கோவிலில் தற்போது உள்ள பழைய சிலையை வைக்க வேண்டும் என தனது கனவில் சித்தர் சாய்பாபா கூறியதாகவும், இதனால் புதிய சிலையை வைக்க விரும்பாமல், அதனை சேதப்படுத்தியதாக சாய்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து கோவில் பூசாரி சாய்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Next Story