‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சீரான குடிநீர் வினியோகம்
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோவில்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரைப்பாண்டி, கோவில்பட்டி.
போதை ஆசாமிகள் அட்டகாசம்
சாணார்பட்டி பஸ்நிறுத்தம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இரவில், அந்த அலுவலகத்தின் முன்பு அமர்ந்து சிலர் மது குடிக்கின்றனர். பின்னர் போதை தலைக்கேறியதும் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து போடுகின்றனர். இதனால் காலையில் அலுவலகத்துக்கு வருவோர் சிரமப்படுகின்றனர். இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீனிவாசன், சாணார்பட்டி.
விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்
திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானாவில் இருந்து பாரதிபுரத்துக்கு திரும்பும் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே விபத்தை ஏற்படுத்தும் பள்ளத்தை மூடவேண்டும். -ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டி ஊராட்சியில் கல்லுக்கடை பிரிவு சாலையில் வேகத்தடை இல்லை. இந்த வழியாக வாகனங்கள் அதிகமாக செல்வதால் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் சாலையை கடப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். -மணிமேகலை, மைக்கேல்பட்டி.
சேதம் அடைந்த மின்கம்பம்
திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து முற்றிலும் உருக்குலைந்துவிட்டது. மேலும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் எலும்புக்கூடு போன்று அது காட்சி அளிக்கிறது. இதனால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே சேதம் அடைந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நடவேண்டும். -ராஜேஷ்குமார், திண்டுக்கல்.
Related Tags :
Next Story